அண்ணல் நபியின் நற்பண்புகள்

அண்ணல் நபியின் நற்பண்புகள் (அஃலாக்குகள்)
"நபியே! நீங்கள் சிறந்த நற்குணமுடையவராக இருக்கிறீர்கள்” என்பதாக அல்லாஹ் தனது அருள் மறையில் (16:14) நன்னபியைப் புகழ்கிறான்.


அண்ணலாரின் நற்பண்புகளின் காரணமாகவே இஸ்லாம் வெகுவாகப் பரவியது என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.


மேலும் அறிந்து கொள்ள கீழுள்ளதை அழுத்தவும் :-உள்ளடக்கங்கள் 


1.இஸ்லாம் என்றால் என்ன?

2.குப்பை கொட்டிய மாது.

3.மூட்டை சுமந்த அண்ணலார். 

4.மலத்தை அகற்றிய மாநபி. 

5.அண்ணலாரின் கற்பித்தல். 


1.இஸ்லாம் என்றால் என்ன?

ஒரு சமயம் அரபி ஒருவர் நபிகளிடம் வந்து ”இஸ்லாம் என்றால் என்ன?” என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”இஸ்லாம் என்றால் நற்குணம்” என்று கூறினார்கள். மீண்டும் அவ்வரபி நபிகளாரின் வலப்பக்கம் வந்து ”இஸ்லாம் என்றால் என்ன?” எனக் கேட்டார். ”இஸ்லாம் என்றால் நற்குணம்” என மறுமொழி பகர்ந்தார்கள் நபிகளார். மீண்டும் இடது பக்கம் வந்து அரபி “இஸ்லாம் என்றால் என்ன?” என்று வினவினார். அதற்குப் புன்முறுவல் பூத்த நபி “இஸ்லாம் என்றால் நற்குணம்” என்று கூறிவிட்டு, "உமக்கு நான் சொன்னது விளங்கவில்லையானால் எவ்வாறு சொன்னால் நீர் விளங்கிக் கொள்வீர்?” எனக் கேட்டார்கள். 


யாறசூலல்லாஹ்! தங்களிடம் அந்த நற்குணம் இருக்கிறதா? என்று பார்ப்பதற்காகவே நான் அவ்வாறு கேட்டேன்” என்று கூறி புனித இஸ்லாத்தைத் தழுவினார் அவ்வரபி.2.குப்பை கொட்டிய மாது.


றசூல் (ஸல்) அவர்கள் தமது வீட்டிலிருந்து இறை இல்லத்திற்குப் போகும் போதெல்லாம் வீட்டு மாடியில் வசித்துவந்த ஒரு மாது நபி அவர்களின் திருமேனியில் குப்பை கூழங்களைக் கொட்டுவது வழக்கமாக இருந்து வந்தது. ஒரு தினம் குப்பை கொட்டப்படாமையால் அந்த வீட்டு மாது பற்றி அயலவர்களிடம் அண்ணலார் வினவினார்கள்.

அப்பெண் சுகவீனமுற்றிருப்பதாகக் கூறப்பட உடனே நபியவர்கள் அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று சுகம் விசாரித்தார்கள். அது கண்ட அப்பெண்மணி தன் தவறினை மன்னிக்குமாறு நபியவர்களை வேண்டியதோடு, திருக்கலிமாவை மொழிந்து இஸ்லாத்துள் இணைந்தார்.


3.மூட்டை சுமந்த அண்ணலார்.


இஸ்லாத்தின் ஆரம்பகாலம் அது. ஒரு வயது முதிர்ந்த மாது தனது மூட்டை முடிச்சுகளுடன் மக்கமா நகரத்தை விட்டுச் சென்று கொண்டிருந்தார். அம்மூதாட்டியின் சுமைகளைப் பெற்றுத் தன் தலையின் மீது சுமந்து கொண்டு நபியவர்கள் சென்றார்கள். “தாயே? தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என வினவினார்கள். அதற்கு அம்மாது, ”யாரோ முஹம்மது என்ற ஒரு நபி வந்திருக்கிறாராம். அவர் எங்களுடைய லாத், உஸ்ஸா ஆகிய தெய்வங்களையெல்லாம் பழித்துக் கூறுகிறாராம். அவருடைய புதிய மார்க்கத்தில் சேருமாறு மக்களை அழைக்கிறாராம். அதனால் நான் இந்த ஊரைவிட்டுச் செல்கிறேன்” என்று கூறி, மேலும் பலவாறாக நபியை நிந்தித்துக் கொண்டும் சென்றார். 


எல்லையை அடைந்ததும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து மூட்டைகளைப் பெற்றுக் கொண்ட மூதாட்டி அதற்குரிய கூலியைக் கொடுத்த போது அதனை நபியவர்கள் பெற மறுக்கவே "தாங்கள் நல்ல பண்புள்ளவர்களாக இருக்கின்றீரே! நீங்கள் யார்?” என்று வினவினாள் அம்மூதாட்டி. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”தாங்கள் இதுவரை யாரைத் தூற்றிக் கொண்டு வந்தீர்களோ அந்த முஹம்மத நான்தான்” என்று கூறினார்கள். இது கேட்ட மூதாட்டி மனம் நொந்து “இத்தகைய நற்பண்புள்ள ஒருவரையா நான் நிந்தித்தேன்" என்று கூறிப் புனித இஸ்லாத்தைத் தழுவினார்.

 

4.மலத்தை அகற்றிய மாநபி.


ஓரிரவு வெளியூர் நாட்டரபி தங்கிச் செல்வதற்கு இடம் வேண்டினார் நபி (ஸல்) அவர்களிடம். அண்ணலார் இரவு உஉணவு வழங்கி, படுப்பதற்கும் வசதிசெய்து கொடுத்தார்கள். எனினும் றசூல (ஸல்) அவர்களை அவமானப்படுத்த வேண்டுமென்று எண்ணிய அவ்வரபி வீட்டின் ஒரு மூலையில் மலம் கழித்து விட்டு விடியுமுன் சென்று விட்டார்.


பொழுது விடிந்ததும் விடயத்தை அறிந்த நபி (ஸல்) அவர்கள் தங்கள் புனித கரத்தால் மலத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். 


அவசரத்தில் சென்றமையால் தனது உறைவாளை வைத்து விட்டுச் சென்றிருந்த அரபி, அதனை எடுக்க வந்தார். "என்னை மன்னித்து விடும். விருந்தளித்த நான் உமக்கு மலகூடத்தைக் காட்டித்தர தவறிவிட்டேன்” என்று மனம் வருந்திப் பண்போடு கூறினார்கள் அண்ணலார். நபியவர்களின் நற்பண்பு அரபியின் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தது. அவர் இனிய இஸ்லாத்துள் 

இணைந்தார்.


5.அண்ணலாரின் கற்பித்தல்.


ஒரு வயோதிப நபித்தோழர் பிழையாக உளூச்செய்வதைக் கண்ணுற்ற றசூல் (ஸல்) அவர்கள் அவரைத் திருத்துவதற்குப் பின்வரும்

 உபாயத்தைக் கையாண்டார்கள்.  


தமது பேரப்பிள்ளைகளை அம்முதியவரின் முன்னிலையயில் உளூச்செய்யுமாறு கூறினார்கள்.

 

அச்சிறுவர்கள் அம்முதியவரிடம் சென்று “பெரியவரே! நாங்கள் உளூச்செய்கிறோம்.சரியா என்று பார்த்துக் கொள்ளுங்கள்” என்று 

கூறி உளூச் செய்தார்கள்.


அதனைக் கண்ணுற்ற அம்முதியவர் தனது பிழையைத் திருத்திச் சரியாக உளூச்செய்யக் கற்றுக்கொண்டார். முதியவரின் தன்மானம் பாதுகாக்கப்பட்டது. மார்க்கவிடயமும் கற்பிக்கப்பட்டது. இவ்வாறு நாமும் நடந்து முதியோர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்போமாக!

படிப்பினை:- 

நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்திற்கு முன்மாதிரியாகவும், ஒளிவிளக்காகவும், கருணையுள்ளவர்களாகவும், நற்குணங்கள் உடையவர்களாகவும் திகழ்ந்தார்கள். நாமும் அண்ணலாரின் நற்குணங்களை அடையப் பெறுவோமாக!மேலும் இது பற்றி அறிந்து கொண்டு பயனடைய click என்னும் படத்தை அழுத்துங்கள்:-👇

Previous
Next Post »