வானத்திலிருந்து இறங்கிய உணவுத்தட்டு

வானத்திலிருந்து இறங்கிய உணவுத்தட்டுஇஸ்ரவேலர்களின் இறுதி இறைத் தூதராகத் தோன்றியவர்களே ஈஸா (அலை) ஆவார்கள். றசூல் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு ஐநூற்று நாற்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன் ஜெரூஸலத்தில் ஈஸா (அலை) அவர்கள் பிறந்தார்கள். அவரின் அன்னை கன்னி மறியம் (அலை) ஆவார்கள்.

மேலும் அறிந்து கொள்ள கீழுள்ளதை அழுத்தவும் :-


அல்லாஹ்வின் அருளால் “குன்" (ஆகுக!) என்ற வார்த்தையைக் கொண்டு உருவானவர்களே மறியத்தின் மகன் மஹீஸ் எனப்படும் ஈஸா (அலை) அவர்கள்.

அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தி இஸ்ரவேலர்களை ஏக இறைவனை ஏற்குமாறு பிரச்சாரம் செய்தார்கள்.

தொட்டிலில் நாற்பது நாள் குழந்தையாக இருக்கும் போது "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய ஓர் அடிமை. அவன் எனக்கு ஒரு வேதத்தை வழங்கி என்னை நபியாக ஆக்குவான்...” என்று பேசினார்கள். இறந்தவர்களை மீண்டும் உயிர்பெறச் செய்தார்கள். களி மண்ணினால் செய்யப்பட்ட பறவைகளுக்கு உயிர் கொடுத்துப் பறக்குமாறு செய்தார்கள். வெண் குஷ்ட நோயாளிகளைக் குணமாக்கியதோடு, குருடர்களைக் கண்ணொளி பெறச் செய்தார்கள். எனினும் இஸ்ரவேலர்களுள் பெரும்பான்மையோர் அவர்களை நபியாக ஏற்றுக் கொள்ளவில்லை. பன்னிரெண்டு சிஷ்யர்கள் (ஹவாரிய்யூன்கள்) அவரை நபியாக ஏற்று அவருக்குத் துணையாக இருந்து வந்தார்கள்.

ஒரு நாள் ஹவாரிய்யூன்கள் ஈஸா (அலை) அவர்களை நோக்கி “மறியமுடைய மகன் ஈஸாவே! எங்களுக்காக விண்ணிலிருந்து ஓர் உணவுத் தட்டை இறக்கிவைக்குமாறு உம்முடைய இறைவனிடம் கேட்பீராக! அதிலிருந்து நாங்கள் உண்டு மனநிறைவு பெறுவதற்கும், தாங்கள் தங்களின் தூதுத்துவம் பற்றி உண்மையே கூறினீர்கள் என்று அறிந்து கொண்டு அதற்குச் சான்று பகர்வதற்கும் விரும்பியே இவ்வாறு வேண்டுகிறோம்” என்று அவர்கள் கூறினார்கள்.

அது கேட்ட ஈஸா (அலை) அவர்கள் இருகரம் ஏந்தி "யா றப்பனா! விண்ணிலிருந்து ஓர் உணவுத்தட்டை எங்களுக்கு இறக்கிவைப்பாயாக! எங்களுக்கும், எங்களின் முன் இருப்பவர்களுக்கும் எங்களுக்குப் பின்வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன்னுடைய அளப்பரும் ஆற்றலுக்கு ஓர் சான்றாகவும் அமையும். எனவே, எங்களுக்கு உணவு நல்குவாயாக! நீயே உணவு அளிப்பதில் மிகச்சிறந்தவன்” என்று இறைஞ்சினார்கள். அதற்கு அல்லாஹ் "நிச்சயமாக நான் நீங்கள் விரும்பியவாறு உணவு நல்குவேன். எனினும் இதற்குப் பின்னரும் எவரேனும் என் ஆணைக்கு மாறு செய்யின் அவரை உலகில் எவருக்கும் செய்திராத அத்துணை கொடிய வேதனையைக் கொண்டு நான் வேதனை செய்வேன்” என்று கூறினான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை விண்ணிலிருந்து ஓர் உணவுத்தட்டு மண்ணகம் இறங்கியது. தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு ஈஸா (அலை) அவர்கள் “உணவளிப்போர்களிலெல்லாம்
மேலானவனாகிய அல்லாஹ்வின் பெயரால் திறக்கிறேன். (பிஸ்மில்லாஹி ஹைருர் ராஸிகீன்) என்று கூறித் திறந்தார்கள். அதனுள் ரொட்டிகளும் சமைத்த மீன்களும் பழவகைகளும்
இருந்தன. ஈஸா (அலை) அவருடைய சீடர்களை உணவு உண்ண அழைத்த போது "இறைவனுக்கு மாறு செய்யின் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும்” என்ற காரணத்தினால் அவர்கள் உண்ண மறுத்து விட்டார்கள். நோயாளர்கள் அதனை உண்டு நலன் பெற்றார்கள். குருடர்கள் கண்ணொளி பெற்றார்கள். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அவ்வுணவை உண்டு பலனடைந்தார்கள். உண்டு முடிந்ததும் உணவுத்தட்டு மீண்டும் விண்ணகம் சென்று விட்டது. இவ்விதமாகப் பல நாட்கள் விண்ணிலிருந்து உணவுத்தட்டு
இறங்கியது என்பதாகக் கூறப்படுகிறது.

அல்லாஹுத்தஆலாவின் அருளைக் கண்ணால் கண்ட போதும் இஸ்ரவேலர்கள் ஏக இறைக் கொள்கையை ஏற்கவில்லை. ஈஸா (அலை) அவர்களை நபியாக ஏற்காது புறக்கணித்ததோடு, அவர்களைக் கொலை செய்யவும் முனைந்தார்கள். அல்லாஹ் அவர்களைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். (4: 158)

மேலும் அறிந்து கொள்ள கீழுள்ளதை அழுத்தவும் :-


படிப்பினை :-

நபிமார்கள் செய்து காட்டிய அல்லாஹ்வுடைய அருளை ஷைத்தான் சூனியம் என்பதாகத் திரித்துக் காட்டியதனால் ஏக இறைவனின் வணக்கத்தை மறுத்து சிலை வணக்கத்தில் மக்கள் ஈடுபட்டு வந்தார்கள்.


Previous
Next Post »