விதியை மாற்றிய துஆ

விதியை மாற்றிய துஆ'அல்லாஹுதஆலா விதித்த விதியை துஆவைத் தவிர வேறெதுவும் தடுத்து விடாது' என்பதும், ‘தான தர்மங்கள் (ஸதக்கா) நோய் நொம்பலங்களையும், பீடைகளையும், (பலாய் முஸீபத்துக்கள்)
தட்டி விடுகிறது' என்பதும் அண்ணல் நபியின் அருள்வாக்காகும். ஸதக்கா மூலமாகவும், துஆ மூலமாகவும் விதி
மாற்றப்பட்ட சம்பவங்கள் பல நடந்தேறியிருக்கின்றன. அத்தகைய
சம்பவங்கள் சில கீழே தரப்பட்டுகின்றன.

மேலும் அறிந்து கொள்ள கீழுள்ளதை அழுத்தவும் :-


உள்ளடக்கம் 

  1. பிள்ளைப் பாக்கியம் பெற்ற சம்பவம்
  2. ஆயுள் நீடிக்கப்பட்ட குழந்தை
  3. மணமகனின் ஆயுள் நீடிக்கப்பட்டமை


1.பிள்ளைப் பாக்கியம் பெற்ற சம்பவம்

இறைவனிடம் பேசி வந்த நபி மூஸா (அலை) அவர்களிடம் ஒரு பெண்மணி, தனக்கு அதுவரை பிள்ளைப்பேறு கிடைக்கவில்லையென்றும், இறைவனிடம் தனக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்க வேண்டி வருமாறும் கூறினாள். இறைவனிடம் இப்பெண்மணியுடைய தேவைபற்றி நபியவர்கள் கேட்டபோது பிள்ளைப்பேறு இல்லை ” என்று விதிப்பலகையில் எழுதப்பட்டிருப்பதை இறைவன் நபியவர்களுக்குக் காட்டினான். திரும்பி வரும்போது அப்பெண்மணியைச் சந்தித்த மூஸா நபி அவளுக்குப் பிள்ளைப்பாக்கியம் அளிக்கப்படவில்லை என்ற செய்தியைக் கவலையோடு அறிவித்துச் சென்றார்கள்.

சில காலத்தின் பின்னர் நபி மூஸா (அலை) அவர்கள் அவ்வழியால் சென்றபோது அப்பெண்மணியின் முற்றத்தில் பல குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர்கள் இறைவனிடம் அது பற்றி விளக்கம் கேட்டார்கள். அதற்குப் பதில் உரைக்காமல் அல்லாஹ் தனக்காக மனித இறைச்சித்துண்டு (அல்லது மனித இரத்தம்) பெற்று வருமாறு பணித்தான்.

அது கேட்ட மூஸா நபி நாடு நாடாக, கிராமம் கிராமமாக "அல்லாஹ் மனித இறைச்சித்துண்டு தருமாறு கேட்கிறான்” என்று கூறித் திரிந்தார்கள். யாரும் மனித இறைச்சி கொடுப்பதாக இல்லை. கடைசியாக ஓர் ஏழை மனிதர் “அல்லாஹ்வா மனித இறைச்சி கேட்கிறான். இதோ நான் தருகிறேன்” என்று கூறித் தன்னுடைய உடலிலிருந்து ஒரு துண்டு இறைச்சியை வெட்டிக்
கொடுத்தார். அவ்விறைச்சித்துண்டை மகிழ்வோடு நபியவர்கள் கொண்டு சென்று அல்லாஹ்வின் சன்னிதானத்தில் சமர்ப்பித்தார்கள். "மூஸாவே! நீரும் மனிதன் தானே! உம்மால் தர முடியாத மனித இறைச்சியை எனக்காகத் தந்த அந்த அடியானின் வேண்டுகோளை நான் எவ்வாறு நிறைவேற்றாமல் இருக்க முடியும்?" என்று பதிலளித்தான் இறைவன்.

நடந்தது இதுதான், பசியால் வாடிய இறையடியாருக்கு உணவு வழங்கினாள் அப்பெண்மணி. வயிறார உண்ட அவ்வடியார் “பெண்ணே! உனது தேவைகள் ஏதும் இருப்பின் கூறுக. நான் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்” என்று கூறினார். அவள் தனக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்க இறைஞ்சுமாறு கேட்க, அதன்படி அவ்விறையடியார் இறைஞ்சினார். அவருடைய துஆ ஒப்புக் கொள்ளப்பட்டது. அப்பெண் பல குழந்தைகளுக்குத் தாயானாள்.


2.ஆயுள் நீடிக்கப்பட்ட குழந்தை

“எமது மூதாதையர்களால் பின்பற்றப்பட்டு வந்த பழைய மார்க்கத்தை விட்டுப் புதிய இஸ்லாம் மார்க்கத்தில் சேர்ந்தால் எங்களுடைய தெய்வங்களின் சாபம் உங்களைப் பின் தொடரும்” என்று எச்சரித்தும் தமது சமூகத்தை விட்டு ஒரு தாயும் குழந்தையும் மதீனா வந்து இஸ்லாத்தைத் தழுவினார்கள். தாய் நபித்தோழரின் வீடொன்றில் பணி செய்து வந்தாள். குழந்தை திண்ணைத் தோழர்களோடு இருந்து வந்தது.

சில நாட்களின் பின்னர் குழந்தை நோயினால் இறந்து விட, அதனைக் குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுகைக்குத் தயாரான போது நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 'குழந்தையின் தாய்க்கு இது அறிவிக்கப்பட்டதா?' என வினவினார்கள், “இல்லை”யென பதில்
கூறப்பட்டதும் “அப்படியானால் அப்பெண்மணிக்கு அறிவியுங்கள்" எனப் பணித்தார்கள். 

தாய்க்கு அறிவிக்கப்பட்டதும் அவள் வந்து, இருகரம் ஏந்தி "யா அல்லாஹ்! மரணம் எல்லோருக்கும் உண்டு. அதனால் நான் எனது குழந்தையின் மரணத்தை பொருந்திக் கொண்டேன். ஆனால், நான் எனது குடும்பத்தை விட்டு வரும்போது 'நீங்கள் இஸ்லாத்தைத் தழுவினால் எங்களுடைய தெய்வங்கள் உங்களுக்குத் தீமை செய்யும்' என சாபமிடப்பட்டது. அதனால் யா அல்லாஹ்! எனது குழந்தையின் மரணத்தின் காரணமாக உண்மையான உனது மார்க்கத்திற்குக் களங்கம் எற்படும். அதனால் என் குழந்தையை உயிர்ப்பித்துத் தருவாயாக!” என இறைஞ்சினாள். உடனே அக்குழந்தை நித்திரையிலிருந்து விழித்தது போன்று உயிர் பெற்று எழுந்தது.


3.மணமகனின் ஆயுள் நீடிக்கப்பட்டமை


ஒரு சமயம் நபி ஈஸா (அலை) அவர்களோடு இஸ்ராயீல் (அலை) அளவளாவிக் கொண்டிருந்தார். அப்போது ஓர் இளைஞர் நபியிடம் வந்து. ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தனக்கு

நடக்கவிருக்கும் திருமண வைபவத்தில் பங்குபற்றுமாறு நபியை வேண்டிச் சென்றார். புன்முறுவல் பூத்த இஸ்ராயீல் (அலை) அவர்கள் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இவ்விளைஞனின் உயிரைக் கைப்பற்றிச் செல்லவே தான் வந்திருப்பதாகக் கூறினார்.

நபி ஈஸா (அலை) அவர்கள் திருமண வைபவத்தில் கலந்து கொண்டார்கள். திருமண வைபவத்தின் இறுதியில் மணமக்களுக்கு விசேடமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு ரொட்டி உண்ணக் கொடுப்பது வழக்கம். ஒரு ரொட்டியை இரண்டு துண்டாக்கி இருவரும் உண்ண ஆயத்தமான போது, ஓர் ஏழை உணவு கேட்டு யாசித்தான். மணமகன் தன் கையிலிருந்த பாதி ரொட்டியை அவ்
ஏழைக்குக் கொடுத்தான். ரொட்டியைப் பெற்றுக் கொண்ட அந்த ஏழை “யா அல்லாஹ் இவருடைய ஆயுளை நீளமாக்கி வைப்பாயாக!” என்று துஆப் பிரார்த்தனை செய்தார். இந்த துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அல்லாஹ்வால் அம்மணமகனின் ஆயுள் நீடிக்கப்பட்டு விட்டது என்ற செய்தியை இஸ்றாயீல் (அலை) அவர்கள் ஈஸா நபியிடம் அறிவித்துச் சென்றார்கள்.


மேலும் அறிந்து கொள்ள கீழுள்ளதை அழுத்தவும் :-


படிப்பினை :-

எமக்கு ஏற்படும் நோய், கஷ்டங்கள், துன்பங்கள் நீங்க தான தர்மங்கள் செய்து அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி
இறைஞ்சுவோமாக! நிச்சயமாக எம்முடைய தேவைகள் நிறைவேற்றித் தரப்படும்.

Previous
Next Post »