இஸ்லாத்தின் பார்வையில் தர்மம்

 தர்மம்


மனிதர்களாகிய எங்களிடம் காணப்பட வேண்டிய மிக முக்கிய குணங்களில் ஒன்றே தர்மம் செய்தலாகும். செல்வம் பெருகுவதற்கும் அதில் பரகத் ஏற்படுவதற்கும் தர்மம் காரணமாக அமைகின்றது. தான் செய்த தர்மமே ஒரு முஸ்லிமுக்கு எஞ்சியிருக்கும்.
மறுமையின் பயங்கரங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள தர்மம் காரணமாக அமைகின்றது. தர்மம் செய்தவர் இறந்த பின்னரும் அதற்கான கூலி அவருக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும்.

மேலும் அறிந்து கொள்ள கீழுள்ளதை அழுத்தவும் :-


உள்ளடக்கம் 

  1. தர்மத்தின் சிறப்பு
  2. சிறந்த தர்மம்
  3. தர்மத்தை இரகசியமாகச் செய்தல்
  4. தர்மத்தை பகிரங்கமாகச் செய்தல்

1.தர்மத்தின் சிறப்பு

மனிதர்களின் பெரும்பாலான ரகசியப் பேச்சுக்களில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தான தர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும்படியோ, மனிதர்களுக்கிடையே சீர்திருத்தம் செய்யும்படியோ அறிவுரை கூறுபவர்களின் பேச்சுக்களைத் தவிர. (4:114)

நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான். (3439)

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், 'செல்வத்தைப் பெருக்கும் ஆசை (மறுமையை விட்டும்) உங்களை அலட்சியத்தில் ஆழ்த்திவிட்டது' (102:1) என்ற வசனத்தை ஓதிக்காட்டி, மனிதன் என்னுடைய பொருள், என்னுடைய பொருள் என்று கூறுகிறான். உண்மையில் நீ உண்டு கழித்ததையும் உடுத்துக் கிழித்ததையும் தர்மம் செய்து செலவழித்ததையும் தவிர உன்னுடைய பொருள் வேறென்ன இருக்கிறது? என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஷிக்ஹீர் (ரலி)
நூல்: முஸ்லிம், திர்மிதி (2445)

ஒரு மனிதர் வனாந்திரத்தில் இருக்கும்போது 'இன்னாருடைய தோட்டத்தில் மழை பொழியச் செய்வாயாக!' என்று மேகத்திலிருந்து ஒரு சப்தம் வந்ததைக் கேட்டார். உடனே அந்த மேகம் நகர்ந்து கற்பாங்கான ஓர் இடத்தில் தனது தண்ணீரைக் கொட்டியது. அங்கிருந்த ஓடைகளில் ஒன்று அத்தண்ணீர் முழுவதையும் வாங்கிக் கொண்டது. அந்த மனிதர் அத்தண்ணீரைப் பின்தொடர்ந்து சென்ற போது அங்கு ஒருவர் தன் தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். மண்வெட்டியால் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவரிடம், "அல்லாஹ்வின் அடியாரே! உங்களின் பெயரென்ன?" என்று கேட்டார். அதற்கு மேகத்திலிருந்து கேட்ட அதே பெயரையே அவர் கூறினார். அவர் கேட்டார்:
"அல்லாஹ்வின் அடியாரே! எதற்காக எனது பெயரைக் கேட்கிறீர்கள்?" அதற்கு அந்த மனிதர், "இந்தத் தண்ணீர் எந்த மேகத்திலிருந்து வந்ததோ அந்த மேகத்திலிருந்து உங்கள் பெயர் கூறி 'இன்னாருடைய தோட்டத்தில் மழை பொழியச் செய்வாயாக!' என்ற ஒரு சப்தத்தைக் கேட்டேன். (அதனால்தான் கேட்கிறேன்)" என்று பதில் கூறினார்.
மேலும், "இதில் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்றும் கேட்டார். அதற்கவர், "நீங்கள் இவ்வாறு கேட்கும் போது நான் கூறித்தானே ஆகவேண்டும். இத்தோட்டத்தில் என்ன விளைகிறது என்று பார்ப்பேன். அதில் மூன்றில் ஒரு பகுதியை தர்மம் செய்வேன். மூன்றில் ஒரு பகுதியை நானும் என் குடும்பத்தாரும் உண்போம். மூன்றில் ஒரு பகுதியை திரும்பவும் இத்தோட்டத்தில் விதைப்பேன்" என்று பதில் கூறினார். மற்றொரு அறிவிப்பில் மூன்றில் ஒரு பகுதியை ஏழைகளுக்கும் யாசிப்போருக்கும் வழிப்போக்கருக்கும் கொடுப்பேன் என்று அவர் கூறியதாக உள்ளது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),
நூல்: முஸ்லிம்.

நல்லதில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அது உங்களுக்கே நன்மையாயிருக்கும் (2:272)

மக்களிடையே மறுமையில் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஒவ்வொரு மனிதனும் தான் செய்த தர்மத்தின் நிழலிலேயே இருக்கிறான். (நபிமொழி)
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்(ரழி)
நூல்: அஹ்மத்.

பாதி பேரீத்தம் பழத்தைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். (நபிமொழி)
அறிவிப்பவர்: அதீ பின் ஹாதம் (ரழி)
நூல்:புகாரி (1417), முஸ்லிம்
நிலையான தர்மம், பயனளிக்கும் கல்வி, தனக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளை ஆகிய
மூன்றையும் தவிர மற்ற செயல்பாடுகள் யாவும் மனிதன் மரணித்ததும் முடிவுக்கு வருகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: முஸ்லிம், திர்மிதி (1390 )

2.சிறந்த தர்மம்


ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்கும்போதும், நீண்ட நாட்களுக்கு வாழவேண்டுமென்ற ஆர்வமும், வறுமை பற்றிய பயமும் இருக்கும்போது செய்யக்கூடிய தர்மமே சிறந்த தர்மமாகும். தேவையுடைய உறவினர்களுக்கு தர்மம் செய்வது மற்றவர்களுக்குத் தர்மம் செய்வதை விட மேலானது.

செல்வ நிலையில் கொடுக்கும் தர்மமே சிறந்ததர்மமாகும். நெருக்கமானவர்களிலிருந்து கொடுக்கத் துவங்கு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல் : புகாரி (1426)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து மகத்தான கூலியைப் பெற்றுத் தரும் தர்மம் எது? என வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், செல்வந்தனாவதற்கு ஆசைப்பட்டு, வறுமை ஏற்படுமோ என்று அச்சம் கொண்டு, கருமியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்போது நீ செய்யும் தர்மமே மகத்தான கூலியைப் பெற்றுத்தரும் தர்மமாகும் (மரணவேளையில் ) உயிர் தொண்டைக் குழியை அடையும் போது இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள், இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள் என்று கூறும் நிலை வரும் வரை தர்மம் செய்வதைத் தள்ளிப்போடாதே! அந்த நேரத்திலோ அந்தச் செல்வம் வேறொருவருக்கு (உன்வாரிசுகளுக்கு ) உரியதாய் ஆகிவிட்டிருக்கும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹரைரா (ரழி)          நூல் : புகாரி (1419, 2748)

ஒரு ஏழைக்கு தர்மம் செய்வது தர்மமாக மட்டுமே அமைகின்றது. ஒரு இரத்த பந்தமுடையவருக்கு தர்மம் செய்வது
தர்மமாகவும் உறவினருடன் இணைந்து வாழ்ந்ததாகவும் அமைகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரழி) நூல்: அஹ்மத்

3.தர்மத்தை இரகசியமாகச் செய்தல்


தர்மத்தை இரகசியமாகச் செய்வது பகிரங்கமாகச் செய்வதை விடச் சிறந்ததாகும். இரகசியமாக தர்மம் செய்பவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது அர்ஷின் கீழ் நிழல் தருகின்றான். 

நீங்கள் தர்மங்களை வெளிப்படையாகச் செய்யின் அதுவும் நல்லதுதான். நீங்கள் அவற்றை யாருக்கும் தெரியாமல் தேவையுடையோருக்குக் கொடுப்பீர்களாயின் அது இன்னும் உங்களுக்குச் சிறந்ததாகும் (2:271)

அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலுமில்லாத அந்த நாளில் ஏழு பேர்களுக்கு அல்லாஹ் தனது நிழலில்
இடம் கொடுப்பான். அவர்கள் : நீதி தவறாத அரசர், இறை வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தைத் தொடர்புபடுத்திக் கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்வுக்காகவே நட்பு கொண்ட இரண்டு நண்பர்கள், அவர்கள் அல்லாஹ்வுக்காகவே இணைந்து அல்லாஹ்வுக்காகவே பிரிகின்றார்கள், உயர் அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தவறான வழிக்கு தன்னை அழைக்கின்றபோது நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன் என்று சொல்லும் மனிதர், வலக்கரம் கொடுப்பதை இடக்கரமும் அறியாவண்ணம் இரகசியமாகத் தர்மம் செய்பவர், தனிமையில் இறைவனை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.          அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி)        நூல்: புகாரி (660), முஸ்லிம், திர்மிதி (2500)

4.தர்மத்தை பகிரங்கமாகச் செய்தல்

ஏதேனும் ஒரு நலனுக்காக தர்மத்தை வெளிப்படையாகச் செய்வது மார்க்கமாக்கப்பட்டுள்ளது. தர்மத்தை வெளிப்படையாகச் செய்வது ஒன்றும் முகஸ்துதியல்ல. நன்மைக்கு முன்னுதாரணமாக அமையும்.

பகலின் ஆரம்ப நேரத்தில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும்போது செருப்பு அணியாத, போதிய ஆடையில்லாத ஒரு கூட்டத்தினர் வந்தனர். கோடு போட்ட கம்பளியை அல்லது பெரிய ஆடையை அணிந்திருந்தனர். வாட்களைத்
தொங்கவிட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் முழர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இன்னும் சொல்வதாயின்
அவர்களனைவரும் முழர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வறுமையைக் கண்டதும் நபி (ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது. உடனே தமது வீட்டிற்குச் சென்று பின்னர் வெளியே வந்து பிலால் (ரழி) அவர்களை பாங்கு சொல்லுமாறு கூறினர். அவர்கள் பாங்கு சொல்லி இகாமத் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள். பிறகு உரையாற்றினார்கள். தம் உரையில், "மனிதர்களே! உங்களின் இறைவனுக்கு அஞ்சுங்கள். அவன்தான் உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும் அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையைப் படைத்தான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம்
(உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர் குலைப்பதை விட்டும் விலகி வாழுங்கள். திண்ணமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்” (59:18) என்ற வசனத்தையும் "இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு
அஞ்சுங்கள். மேலும் ஒவ்வொரு மனிதனும் நாளைய தினத்திற்கு எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று
பார்க்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணமிருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கிறான்"(59:18) என்ற வசனத்தையும் ஓதி, யாரேனும் தர்மம் செய்யுங்கள். தமது தீனாரை, திர்ஹமை, ஆடையை, ஒரு ஸாஉ கோதுமையை, ஒரு ஸாஉ பேரீத்தம் பழத்தை, ஏன் பாதி பேரீத்தம் பழத்தையாவது தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள். உடனே அன்ஸார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் கையால் தூக்கமுடியாத (கனத்த ஒரு பையைக் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து மக்களும் ஒருவர் பின்னர் ஒருவராக கொடுக்கலானார்கள். இறுதியில் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகளின் இரு பெரும் குவியலையே கண்டேன். மேலும் நபி (ஸல்) அவர்களின் முகம் பொன்னைப் போல்
பிரகாசிப்பதையும் கண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "இஸ்லாத்தில் யார் ஒரு அழகிய
நடைமுறையை ஏற்படுத்துகிறாரோ அவருக்கு அதற்கான கூலியும், அவருக்குப் பின்னால் யாரெல்லாம் அதை மேற்கொள்கின்றாரோ அவர்களுடைய கூலியும் சற்றும் குறையாமல் கிடைக்கும். யார் இஸ்லாத்தில் தீய நடைமுறையை
ஏற்படுத்துகிறாரோ அவருக்கு அதற்கான பாவமும், அவருக்குப் பின்னால் யாரெல்லாம் அதை மேற்கொள்கிறாரோ
அவர்களது பாவமும் சற்றும் குறையாமல் கிடைக்கும்."
அறிவிப்பவர் : ஜரீர் (ரழி)
நூல்: முஸ்லிம்.

மேலும் அறிந்து கொள்ள கீழுள்ளதை அழுத்தவும் :-


Previous
Next Post »