ஜமாஅத் தொழுகை

 ஜமாஅத் தொழுகை

ஜமாஅத்துடன் தொழுவது ஆண்களுக்குக் கடமையாகும். ஜமாஅத்துக்கு வராமலிருப்பது நயவஞ்சகர்களின் 
அடையாளங்களில் ஒன்றாகும்.

மேலும் அறிந்து கொள்ள கீழுள்ளதை அழுத்தவும் :-


சந்தர்ப்பவாதிகளுக்கு மிகப் பாரமான தொழுகை இஷாவும் ஃபஜ்ருமாகும். இவ்விரண்டிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிந்து கொள்வார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். தொழுகை நிலைநாட்டப்பட நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறி பிறகு என் வாலிப நேயர்களிடம் விரகுக் கட்டைகளை சேகரிக்கும்படிச் செய்து அவர்களுடன் சென்று ஜமாஅத்துக்கு வராதவர்களை அவர்களின் வீட்டோடு தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)        நூல்: புகாரி (657), முஸ்லிம்

கண் பார்வையற்ற ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னை பள்ளிக்கு அழைத்து வருபவர் யாருமில்லை. எனவே வீட்டிலேயே தொழுவதற்கு அனுமதிக்குமாறு வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கி அவர் சென்று கொண்டிருக்கும் போது அவரை அவர்கள் அழைத்து தொழுகைக்காக பாங்கு சொல்லப்படுவதை நீர் கேட்கிறீரா என்றனர். அதற்கவர் 'ஆம்' என்றதும் அந்த அழைப்புக்கு நீ (ஜமாஅத்துக்கு வருவதன் மூலம்) பதிலளிப்பீராக என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.          அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)        நூல்: முஸ்லீம்

நாளை மறுமையில் தாம் முஸ்லிமான நிலையில் இறைவனைச் சந்திக்க விரும்புவோர் இத் தொழுகைகளை அவற்றிற்காக பாங்கு சொல்லப்படும் இடத்தில் (பள்ளிவாசலில்) முறையாகப் பேணி (தொழுது) கொள்வாராக! திண்ணமாக அல்லாஹ் உங்களுடைய நபிக்கு நேரிய வழிமுறைகளை
மார்க்கமாக்கியுள்ளான். பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழும் இத்தொழுகைகளும் நேரிய வழிகளில்
ஒன்றாகும்.

ஜமாஅத்தில் கலந்துகொள்ளாது தன் வீட்டில் தொழுபவரைப்போல நீங்களும் உங்கள் வீடுகளில் தொழுவீர்களானால் உங்கள் நபியின் வழிமுறையை கைவிட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டீர்களானால் நிச்சயம் நீங்கள் வழிதவறிப் போவீர்கள். எவர் உளுச் செய்து அதை நல்ல முறையில் செய்து  இப்பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை நாடி வருகிறாரோ அல்லாஹ் அவருக்கு அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் பதிலாக ஒரு நன்மையை எழுதி, ஒரு பதவியை உயர்த்துகின்றான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகின்றான். எங்களிடையே நான் பார்த்திருக்கிறேன் பகிரங்கமான சந்தர்ப்பவாதியைத் தவிர வேறெவரும் ஜமாஅத்துக்கு வராமல் இருக்க மாட்டார். திண்ணமாக இயலாதவரைக் கூட இரண்டு பேர் கைத்தாங்கலாக அழைத்து வந்து வரிசையில் நிறுத்தப்படும் என்று இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.                                      நூல் : முஸ்லிம்

ஜமாஅத் தொழுகையின் சிறப்பு

ஜமாஅத்துடன் தொழுவதற்கு சிறப்புகள் அதிகமுள்ளன. ஒருவர் தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது சிறந்தது. ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவதை விட்டுவிடுவது ஷைத்தான் அவர் மீது ஆதிக்கம் கொள்வதற்குக் காரணியாகின்றது.

ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் கடைவீதியில் தொழுவதை விடவும்
இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும். இது ஏனென்றால் ஒருவர் அழகிய முறையில் உளுச் செய்து தொழுகைக்காகவே பள்ளியை நோக்கிச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது.

அவர் தொழுது முடித்துவிட்டு அவ்விடத்திலேயே இருக்கும் வரை வானவர்கள், இறைவா! இவருக்கு நீ அருள் புரிவாயாக! என்று பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாத்அத்து) தொழுகையை எதிர்பார்த்து (தொழும் இடத்திலேயே இருந்து) கொண்டிருப்பவர் தொழுகையிலேயே இருப்பார் என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல் : புகாரி (647), முஸ்லிம்


ஏதேனும் ஒரு ஊரிலோ அல்லது காட்டுப் பகுதியிலோ மூன்று பேர்கள் இருந்து அவர்களிடையே (ஜமாஅத்தாக)
தொழுகை நிறைவேற்றப்படாவிட்டால் அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் கொள்கிறான். எனவே ஜமாஅத்துடன் தொழுவதைக் கடைபிடியுங்கள் ஏனெனில் தனிமையில் மேயும் ஆட்டைத்தான் ஓநாய் கபலிகரம் செய்கின்றது என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரழி)
நூல்: அபூதாவூது


தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது
இருபத்தேழு மடங்கு சிறந்ததாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி)
நூல்: புகாரி (645), முஸ்லிம்.

மேலும் அறிந்து கொள்ள கீழுள்ளதை அழுத்தவும் :-


எனவே  நாம் எமது தொழுகைகளை ஜமாஅத்துடன் மேற்கொள்வதன் மூலம் உயரிய பயனைப் பெறுவோம்.Previous
Next Post »